எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முழு பொறுப்பும் எனக்கு உண்டு. மாற்றமில்லாத தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நான் பாடுபடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று நடைபெற்றது.
சபாநாயகர், பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் முதல் அமர்வில் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கொள்கை பிரகடன உரை நிகழ்த்தினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,எமது நாட்டு வரலாற்றில் சமாதானமாக இடம்பெற்ற தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்பட்டு உங்கள் முன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜனவரி 8ஆம் திகதி நான் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டபோது எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி.
நாட்டுக்குப் பொறுத்தமான தேர்தல் முறையை கொண்டுவரவேண்டியது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். ஒவ்வொரு அரசாங்கத்துக்கு அரசாங்கம், ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மாற்றம் கொண்டுவருவது போலல்லாது மாற்றமில்லாத தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நான் பாடுபடுவேன்.
எனக்குத் தெரிந்த வகையில் மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் முன் நிறைய சவால்கள் உண்டு.இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை மக்கள் உபயோகிக்கிறார்கள். இன்று கிராம மட்டத்தில் கூட டெப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையிலேயே நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முழு பொறுப்பும் எனக்கு உண்டு. அதனை காத்திரமான முறையில் செயலாற்ற அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறேன்.
2020 ஆம் ஆண்டுகளில் புதிய உலகத்துக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் உயர்வான மாணவ சமுதாயத்தை உருவாக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
எமது நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது எமது பிராந்தியத்தில் ஏனைய நாடுகள் வளர்ச்சியடைந்தன. இன்று அந்நாடுகள் முன்னோக்கிச் சென்றுள்ளன.
அதற்கு நிகரான வளர்ச்சியை நாம் அடைய வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கத்தை உருவாக்க முயற்சி செய்து வந்தேன்.
நிறைவேற்று அதிகாரம் தொடர வேண்டுமா என்பது தொடர்பில் இங்கு அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டும்.
அதேபோல் தேர்தல் முறையில் விருப்பு வாக்கு முறைமையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆக பொருத்தமான தேர்தல் முறையை கொண்டு வர வேண்டியதும் பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.
நாட்டில் இன ஒற்றுமைக்கு எனது அரசாங்கத்தினூடாக தலைமைத்துவம் வழங்க நான் தயாராக இருக்கிறேன்.
இலஞ்சம், ஊழலை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். அதற்காக இலஞ்சம், ஊழல், அரச உடைமைகளை தவறாக பயன்படுத்தியோர் மீது தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க நான் பின்நிற்க மாட்டேன்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இரு பிரதான கட்சிகள் ஆட்சி செய்து வந்துள்ளன. ஒரு கட்சி 35 வருடங்களும் மற்றுமொரு கட்சி 32 வருடங்களும் ஆட்சி செய்திருக்கின்றன.
எமது அரசாங்கம் தேசிய அரசாங்கமாக ஒற்றுமையுடன் செயற்பட்டு நாட்டை அபிவிருத்தியுடன் கூடிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். அந்த நோக்கத்தை அடைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.





