அறுபது வருடங்களாக இந்த நாட்டில் பலதையும் இழந்த சிறுபான்மை சமூகம் தந்தை செல்வா அவர்களின் பாசறையில் பொறுமையுடன் போராடி இன்று ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கும் சிறிய ஒளிக்கீற்றாக இந்த மண்ணின் மைந்தன் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இன்று பரிணமிக்கின்றார். இலங்கை சிறுபான்மை சமூகத்தின் குரலாக வாழும் அவருக்கு நீங்கள் மரியாதை அழிப்பது மிகவும் பெருமைக்குரியது. அது உங்களின் கடமையும் கூட ஏனன்றால் அவர் உங்கள் மண்ணின் சொந்தக்காரன் என மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.
திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக தெரிவான கௌரவ இரா.சம்பந்தனுக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,எங்கள் இனம் அளிக்கப்பட்டிருக்கின்றது. இழப்புக்களை அதிகம் கொண்டிருக்கின்றது. இவர்களின் விடிவுக்காக அகிம்சைப் போராட்டம் பின் ஆயுதப் போராட்டம் பின்னர் அரசியல் ரீதியான இராஜதந்திரப்போராட்டம் என இன்று நாம் களத்தில் நிற்கிறோம்.
இன்று எமக்கு கிடைத்த தலைவர் அவர்களைப் பற்றி இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிடும்போது இலங்கையின் மூத்த அரசியல்வாதி மட்டுமல்ல ஆசியாவின் மூத்த அரசியல்வாதி என்று பெருமையாக குறிப்பிட்டார்.
அந்தளவுக்கு தகுதியும் தரமும் கொண்ட தலைவரை நாம் பெற்றுள்ளோம். இந்த எதிர்கட்சி தலைமை என்பது இந்தநாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ அள்ளிக்கொடுத்த ஒன்றல்ல. இந்த நாட்டின் ஜனநாயாக மரபின் படி கிடைத்த ஒன்று. மேலும் எமது போராட்டத்தின் ஒரு அங்கீகாரமே இந்தப்பதவி என்று குறிப்பிட்டார்.