சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் விழிப்புனர்வு நிகழ்வு (08.09)செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெற்றது.
வவுனியா ராஜ் மெடிக்கல் சென்ரர் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினால் நடத்தப்பட்ட இந் நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சர்வதேச எழுத்தறிவு தினம் செப்டெம்பர் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அங்கத்துவ நிறுவனமான யுனெஸ்கோ நிறுவனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச எழுத்தறிவு தினம் 1966 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந் நிலையில் எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் அது தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் வவுனியா மூன்று முறிப்பு தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5, தரம் 6 மாணவர்களுக்கு இந் நிகழ்வு நடாத்தப்பட்டது.
விழிப்புணர்வு கருத்துரைகளை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவரும் வவுனியா வரியிறுப்பாளர் சங்க தலைவருமான செ.சந்திரகுமார், தமிழ் விருட்சத்தின் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன், ஊடகவியலாளரும் வரலாறு பாட ஆசிரியருமான ரி.கே.வசந்தன், பாடசாலை உப அதிபர் திருமதி நிலாநேசன் விஜயராணி, ஆசிரியர் ஆர்.சீதாரோஜினி ஆகியோர் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நினைவுப் பரிசில் ஆக பாடசாலை அப்பியாசக் கொப்பிகளும், ஒரு கப் பாலும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை ராஜ் மெடிக்கல் உரிமையாளர் கௌதமன் வழங்கி வைத்தார்.
-பிரதேச நிருபர் –