வவுனியா நகரசபையின் சிற்றூழியர்கள் நேற்று 09.09 (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டமாகவும் அதனை விஸ்தரித்துள்ளனர்.
அடிப்படை சம்பளம் குறைத்து வழங்கப்பட்டமை மற்றும் சம்பளம் சீர் செய்யப்படாமை, பதவி வெற்றிடம் நிரப்பப்படாமை தொடர்பாக நேற்று முன்தினம் முதல் வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தமது கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என தெரிவித்து நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்றையதினம் வவுனியா நகரசபைக்கு வருகை தந்த வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவதூராக பேசியதாகவும் தம்மை தாக்கியதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்ததுடன் வவுனியா பொலிஸில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை உள்ளுராட்சி ஆணையாளர் தாக்கியதால் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்து வவுனியா நகரசபையின் சிற்றூழியர் ஒருவர் இன்று அதிகாலை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வவுனியா நகரசபைக்கு வருகை தந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதேவேளை தமது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் தாம் தொடர்ந்தும் இறக்கும் வரையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தனர்.
-பிராந்திய செய்தியாளர் –