சவூதி அரேபிய நகரான மக்காவிலுள்ள ஹோட்டலொன்றில் வியாழக்கிழமை தீ ஏற்பட்டு பரவியதையடுத்து, அங்கிருந்து சுமார் 1,000 ஆசிய யாத்திரிகர்கள் வெளியேற்றப்பட்டதுடன் இரு யாத்திரிகர்கள் காயமடைந்த நிலையில் தீயணைப்புப் படைவீரர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த இரு யாத்திரிகர்களும் பெயர் வெளியிடப்படாத குறிப்பிட்ட 11 மாடிகளைக் கொண்ட ஹோட்டலின் 8 ஆவது மாடியில் வெளியேற முடியாது சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருட ஹஜ் யாத்திரையையொட்டி மக்காவை ஒரு மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் ஏற்கனவே வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்த யாத்திரி கர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
கடந்த வாரம் மக்காவின் பெரிய பள்ளிவாசலில் பாரந்தூக்கி உபகரணமொன்று உடைந்து விழுந்ததில் குறைந்தது 111 பேர் பலியாகி 390 பேர் காயமடைந்துள்ள நிலையிலேயே இந்தத் தீ அனர்த்தம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





