மக்காவில் சனநெரிசலில் சிக்கி பலியானவர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!!

401

Makka

மக்கா மசூதி அருகே ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளதோடு 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போதே இந்த சன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளை உலக இஸ்லாமிய மக்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருவதோடு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சவுதியில் இவ்வாறு சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் இலட்சக்கணக்கானோர் மக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு தங்கள் ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றினார்கள்.

மேலும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு இன்று மக்காவில் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. எனினும் ஹஜ் புனித வழிபாட்டிற்கு யாத்திரிகள் பலர் ஒன்றாக குவிந்தமை காரணமாகவும் மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறிய முற்பட்டதாலும் இந்த சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சன நெரிசலில் சிக்கி 310 பேர் உயிரிழந்துள்ளதோடு 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சன நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்து உள்ளது.

அண்மையில் மக்கா மசூதியில் கிரேன் முறிந்து 107 பேர் பரிதாபமாக பலியானதோடு 200 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.