
இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து இன்று காலை சென்ற பயணிகள் விமானத்திலேயே சந்தேகநபர் பயணித்துள்ளார்.
விமானம் தரையிறங்கிய பின்னர் பயணிகளது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் இலங்கையை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொண்டு சென்ற டீ தூள் பாக்கெட்டுகள் குறித்து எழுந்த சந்தேகத்திற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் அதிகாரிகள் டீ தூள் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தனர். அதில் தலா 100 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
ஒரு கிலோ தங்கம் இதில் இருந்துள்ளது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் யாருக்கு கடத்திச் செல்லப்படுகிறது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





