இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் இறக்கவில்லை. 1948-ம் ஆண்டு வரை அவர் சீனாவில் வாழ்ந்தார்’’ என்று மேற்குவங்க அரசு வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறுதி காலம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க அரசு தன்னிடம் உள்ள 64 முக்கிய ஆவணங்களை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அந்த ஆவணங்களின் நகல்கள், கொல்கத்தா பொலிஸ் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் திகதி, பார்மோசா (இப்போது தைவானில் உள்ளது) என்ற பகுதியில் விமான விபத்தில் நேதாஜி பலியானார்’ என்று அதே ஆண்டு ஆகஸ்ட் 22-ம் திகதி டோக்கியோ வானொலியில் செய்தி வெளியானது.
அந்தச் செய்தியை நேதாஜியின் தீவிர ஆதரவாளர்கள் அப்போதே நிராகரித்தனர். அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று கூறிவந்தனர்.
இந்நிலையில் மேற்குவங்க அரசு வெளியிட்ட ஆவணங்களில், நேதாஜி 1948-ம் ஆண்டு வரை உயிருடன் இருந்ததாக அவருடைய நெருங்கிய உதவியாளர் தேவ்நாத் தாஸ் என்பவர் கூறிய செய்தி இடம்பெற்றுள்ளது. சீனாவின் மன்சூரியா என்ற இடத்தில் 1948 வரை நேதாஜி உயிர் வாழ்ந்தார் என்று தேவ்நாத் தாஸ் கூறியுள்ளார். இந்த தகவல் 22-வது எண் கொண்ட ஆவணத்தில் உள்ளது.
விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக தகவல் வெளியானவுடன், அப்போதைய பெங்கால் அரசு தீவிர புலனாய்வில் இறங்கி உள்ளது.
அப்போது தேவ்நாத் தாஸ் உட்பட பலருடைய தகவல்களை பொலிஸ் துணை ஆணையர் அலுவலகம் திரட்டி உள்ளது. அதில், 1948, ஆகஸ்ட் 9-ம் திகதியிட்ட ஆவணத்தில், ‘‘இந்திய தேசிய இராணுவத்தின் முன்னாள் தலைவர் தேவ்நாத் தாஸ், காங்கிரஸுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தவர். அவர்தான், ‘நேதாஜி உயிருடன் இருக்கிறார். சீனாவின் மன்சூரியா பகுதியில் இருக்கிறார்’ என்று கூறிவந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விமான விபத்து நடப்பதற்கு முன்பு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் 3-ம் உலகப் போர் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று நேதாஜி தன்னிடம் கூறியதாக தேவ்நாத் தாஸ் கூறிவந்துள்ளார்.
மேலும், சீனாவில் இருந்து கொண்டே இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள், உலக நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள், சூழ்நிலைகளை நேதாஜி கண்காணித்து வந்தார் என்றும் தேவ்நாத் தாஸ் கூறியுள்ளார். மேலும், தெற்கு கொல்கத்தா தொகுதியில் அப்போது நடை பெற்ற இடைத்தேர்தலில் தேவ் நாத் தாஸ் போட்டியிடலாம் என்ற பேச்சு அடிபட்டதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், தேவ்நாத் தாஸ் அப்போதைய இந்திய அரசை கண்டித்து ஆவேசமாக பேசிய தகவல்கள் மட்டும் தான் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸுக்கு எதிராக அவர் செயல்பட்டதற்கான குறிப்புகள் காணப்படவில்லை.
காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி இரண்டாம் உலகப் போரின்போது பல தலைவர்களை சந்தித்துள்ளார். அத்துடன் ஜப்பான் உதவியுடன் இந்திய தேசிய இராணுவத்தை சிங்கப்பூரில் தொடங்கினார். அதன்பின், பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தை கடுமையாக எதிர்த்தார்.
மேலும், வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த நிலையிலேயே தற்காலிக அரசை கடந்த 1943-ம் ஆண்டு நேதாஜி நிறுவி செயல்படுத்தி வந்தார். அந்த அரசில் தேவ்நாத் தாஸ் முக்கிய உறுப்பினராக செயல்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.





