முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.வுக்கு வழங்கிய உள்ளக விசாரணை உறுதிமொழியையே மைத்திரி – ரணில் தலைமையிலான புதிய அரசு முன்னெடுக்கின்றது.இதில் புதிய விடயம் எதுவுமில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜெனிவா பிரேரணை இலங்கைக்கு சார்பாக அமைந்திருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி தொடர்பான அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவை முன்வைத்த அறிக்கையில் புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இலங்கை தரப்பில் அரச தலைவர்களினதோ, படை அதிகாரிகள் எவரினதும் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை வரைபிலும் இலங்கைக்கு எதிராக எவ்விதமான கடுமையான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சியை வரவேற்றுள்ளதோடு, முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளையும் ஆதரித்துள்ளன.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீன் மூன் இலங்கை வந்தார். இதன்போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி கட்ட யுத்தம் தொடர்பாக சர்வதேச தரத்திலான உள்ளக விசாரணை நடத்தப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கினார். அது மட்டுமில்லாது ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் இணைந்து கூட்டறிக்கையும் வெளியிட்டார்.
ஆனால் இந்த உறுதி மொழிக்கமைய மஹிந்த ராஜபக்ஷ உள்ளக விசாரணையை நடத்தவில்லை. எனவே தான் ஐ.நா. சபை சர்வதேச விசாரணைகளுக்கு வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் தலைமையிலான ஆட்சி ஏற்பட்டது. இன்றைய அரசாங்கம் புதிதகா எதனையும் மேற்கொள்ளவில்லை. மஹிந்தவின் உறுதி மொழியைத்தான நிறைவேற்றுகின்றது.
அத்துடன் நாட்டை சர்வதேச விசாரணை பொறியிலிருந்து புதிய அரசு பாதுகாத்துள்ளது. எனவே தேச தரத்திற்கமைய உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் நீதித்துறை, சட்டத்துறைக்கேற்பவே அனைத்தும் நடைபெறும். எனவே சர்வதேச விசாரணை இடம்பெறாது. முழுமையாக இலங்கையின் சட்டத்துறைக்கமைவாகவே அனைத்தும் முன்னெடுக்கப்படும். புதிய அரசின் நடவடிக்கைகளை நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.





