21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கே சொந்தமானது – நாட்டுக்காகவே வாழ்ந்து நாட்டுக்காகவே சாவேன்: மோடி பரபரப்பு பேச்சு!!

629

Modi-1

இருபத்தொன்றாம் நூற்றாண்டை இந்தியாவுக்கு சொந்தமாக்கும் வகையில் நாட்டுக்காகவே வாழ்ந்து நாட்டுக்காகவே சாவேன் என அமெரிக்காவாழ் இந்தியர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் ஜோஸ் நகரில் சுமார் இருபதாயிரம் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

கடந்த 16 மாதங்களாக இந்தியாவைப் பற்றிய உலக நாடுகளின் அபிப்பிராயம் வெகுவாக மாறியுள்ளது. புதிய எதிர்பார்ப்புடன் இன்று இந்தியாவை உலகம் பார்க்க தொடங்கியுள்ளது. சமீபகாலமாக 21-ம் நூற்றாண்டு, இந்தியாவின் நூற்றாண்டு என மக்கள் பேச தொடங்கியுள்ளனர்.

இந்த மாற்றத்துக்கு இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் பலம் மற்றும் அர்ப்பணிப்புணர்வு முக்கிய காரணமாகும். நமது நாட்டின் 65 சதவீத மக்கள்தொகையினர் (80 கோடி பேர்) 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் நமது நாட்டின் வெற்றிமீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

வெறும் பதினைந்தே மாதங்களில் இந்தியா புதிய உயரத்தை எட்டி, பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக உலகின் மிகப்பெரிய நாடுகளில் பொருளாதார ரீதியாக மிகவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியாவை அனைத்து தரப்பு மதிப்பீட்டாளர்களும் ஒருமித்த குரலில் மதிப்பீடு செய்துள்ளனர்.

மூளைவறட்சி என்பது மூளைவளர்ச்சியாக உருமாறும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இது, உரிய நேரத்தில் தாய்நாட்டுக்கு சேவை செய்வதற்கான மூளைமுதலீடு என கொள்ள வேண்டும். இப்போது, மக்களுக்கு தங்களது பலத்தை காட்ட வேண்டிய நேரம் ஒவ்வொரு இந்தியருக்கும் வந்துள்ளது.

எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இந்த நாட்டின் சேவைக்காக நான் செலவிட்டு வருகிறேன். இந்த நாட்டுக்காகவே வாழ்ந்து, நாடுக்காகவே சாவேன் இவ்வாறு அவர் கூறினார்.