இளைஞர் யுவதிகளுக்குத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, செயற்திறனுள்ள ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஊடகத்திற்கான அடிப்படைக் கல்வி நிறுவனம் ஒன்று வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளரும், ஆய்வாளருமாகிய அருணா செல்லத்துரை இந்தக் கல்வி நிறுவனத்தை நாடா வெட்டி, வைபவரீதியாக, வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கத்துடன் இணைந்து திறந்து வைத்தார்.
இவ்விழாவில் முக்கிய விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான இந்திரராஜா, எம்.பி.நடராஜா மற்றும் ஊடகவியலாளர் கபிலநாத் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். ஊடகத்திற்கான அடிப்படைக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.நிக்சலன் வரவேற்புரையாற்றினார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ரொஷான் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
இங்கு உரையாற்றிய இந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.இராஜேஸ்வரன் இந்த நிறுவனத்தின் ஊடாக சமூகத்திற்கு ஊடகத்துறை சார்ந்த பல சேவைகள் ஆற்றத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பிரதம உரையாற்றிய மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை, ஊடகங்களின் முக்கியத்துவம், வன்னிப்பிரதேசத்திற்கென தனியான ஊடகங்களின் அவசியம், ஊடகவியாரளர்களின் பொறுப்பு கடமை என்பவற்றைக் குறித்து கருத்துரைத்தார்.
இளைஞர் யுவதிகளை ஊடகத்துறையில் தகுதியும் ஆற்றலும் மிக்கவர்களாக வளர்த்தெடுப்பதற்கான இந்த நிறுவனத்தின் முயற்சியைப் பாராட்டினார்.
இங்கு உரையாற்றிய வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் ஊடகவியாளர்கள் மற்றும் ஊடகங்களின் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அதேவேளை, சனல் 4 ஊடகவியலாளராகிய கலம் மக்ரே ஆற்றி வருகின்ற பாராட்டுக்குரிய மகத்துவம் மிக்க ஊடகப் பணியின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, ஊடகத்துறை சரியான முறையில் செயற்பட வேண்டியதன் தேவைகுறித்து எடுத்துரைத்தார்.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்றியதை நினைவுகூர்;ந்து உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காக சிவாரம் போன்ற சிறந்த ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் எடுத்துரைத்தார். ஊடகப் பணியின் முக்கியத்துவத்தை நினைவூட்டிய அவர், இளம் ஊடகவியாளர்களை உருவாக்குவதற்காக முன்வந்துள்ள இந்த நிறுவனம் சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர் பி.மாணிக்கவாசகமும் உரையாற்றினார்.






