சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்பாப்வேயுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது.
இரு அணிகளுக்கு இடையி லான முதல் இருபதுக்கு 20 போட்டி ஹராரேயில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி அகமது ஷேசாத், முக்தார் அகமது ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.ஷேசாத் 17 ஓட்டங்களுடனும், முக்தார் அகமது 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த சோயிப் மாலிக் 35 ஓட்டங்களையும், மொகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் எடுக்க பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை சேர்த்தது.
பின்னர் 137 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிம்பாப்வே அணி களம் இறங்கியது.சிம்பாப்வே அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.இதனால் பாகிஸ்தான் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





