
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சேலம் மாவட்டம், அம்மாப்பாளையத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா என்கின்ற நவரத்தினராஜா (வயது 35). திருவண்ணாமலை அருகே உள்ள மதுராம்பட்டு கிராமத்தில் தங்கி சாலை மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவரை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கிவிட்டார். இவர்களுக்கு சிவகுமார் (6), இளமாறன் (4) என 2 மகன்கள் உள்ளனர்.
ராஜாவின் தாய் மற்றும் தந்தை இலங்கையில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் கணவன் –மனைவி இருவரும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று ராஜாவும், அஞ்சலையும் இலங்கைக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு அவர்களுடைய கடவுச்சீட்டை அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர். அப்போது ராஜாவின் பெயர் ராஜா என்கிற நவரத்தினராஜா என்றிருப்பதை பார்த்து அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. எனவே, அவரை இலங்கைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும் அவருடைய கடவுச்சீட்டை திருவண்ணாமலை மாவட்ட பொலிஸ் அலுவலகத்திற்கு அனுப்பி அதை சரிபார்க்க சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டனர்.
அதன்படி வேட்டவலம் பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா என்கிற நவரத்தினராஜா இலங்கையை சேர்ந்தவர் என்பதும், அவர் மதுராம்பட்டு முகவரியை வைத்து ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு பெற்று அதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் போன்று போலியான பாஸ்போர்ட்டை பெற்றதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்தனர்.





