
இலங்கை, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகை தங்கக்கட்டிகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுதொடர்பாக மூவரை கைதுசெய்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இலங்கை மற்றும் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேற்றுமுன்தினம் இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 03.30 அளவில் இலங்கை அரசுக்கு சொந்தமான மிகின்லங்கா விமானம் கொழும்பில் இருந்து மதுரை விமானநிலையம் வந்தது. வருவாய் புலனாய்வுத்துறை துணை இயக்குனர் பாரிவள்ளல் தலைமையில் அதிகாரிகள் விமானத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில், விமான இருக்கையின் கீழ்பகுதி மற்றும் பயணிகள் பெட்டிகள் வைக்கும் பகுதிகளில் ஏராளமான தங்க பிஸ்கட் மற்றும் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை யார் கடத்தி வந்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை.
பயணிகள் பட்டியலை வைத்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இதேபோல, துபாயில் இருந்து வந்த தனியார் விமானத்தையும் அதிகாரிகள் குழுவினர் சோதனையிட்டனர். இந்த விமானத்திலும் ஏராளமான அளவுக்கு தங்கக்கட்டிகள் சிக்கின, மீட்கப்பட்ட மொத்த தங்கத்தின் நிறை 31.75 கிலோ கிராம் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விமானத்தில் சந்தேகப்படும்படி வந்த மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் யார் என்பது குறித்த தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
மதுரை விமானநிலையத்தில் முதல்முறையாக ஒரே நாளில் இந்த அளவுக்கு தங்கக்கட்டிகள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானங்கள், மதுரையில் இருந்து சென்னை செல்லக்கூடியவை என்பதால், தங்கக்கடத்தல் கும்பல், பயணிகள் போர்வையில் தங்கத்தை கடத்திச் செல்ல திட்டமிட்டனவா என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.





