பாபநாசத்தின் வெற்றிக்கு பிறகு கமலிடம் ஏராளமான மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும், தான் சார்ந்திருக்கும் துறைப் பற்றியும் ஏராளமான விடயங்களில் தன் கருத்தை பதிவு செய்து வருகிறார். அத்துடன் அதற்கான செயல்களில் இறங்கி நற்பெயரை சம்பாதித்து வருகிறார்.
குறிப்பாக இதுவரை விளம்பர படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்காத கமல், முதன்முறையாக ஒரு தனியார் ஆடை விற்பனை நிறுவனத்திற்கான விளம்பரத்தில் தோன்றியதுடன், அதற்காக பெற்ற கோடிக்கணக்கிலான ஊதியத்தை ஹெச்.டீ.வி பாதித்த குழந்தைகளின் மேம்பாட்டிற்காக மனமுவந்து அளித்ததை பாராட்டாத ஆட்களேயில்லை எனலாம்.
இந்திய நட்சத்திரங்களிலேயே கமலின் இந்த சேவை மனப்பான்மையை பாராட்டி இவருக்கு பாரத ரத்னா விருது கூட கொடுக்கலாம் என்கிறார்கள் சிலர்.
அதே போல் நடிகர் சங்கம் குறித்தும், அதன் தேர்தல் குறித்தும் இவர் தெரிவிக்கும் பல கருத்துகள் உண்மையிலேயே வரவேற்கப்படகூடியதாக இருக்கின்றன.
தன்னுடன் இருக்கும் நடிகை கௌதமிக்கு மீண்டும் நடிக்கும் வாய்ப்பையும், அதனைத் தொடர்ந்து ஆடை வடிவமைப்பாளர் பணியையும் கொடுத்து, தற்போது அவரை முன்னிறுத்தி கதையொன்றையும் எழுதி வரும் கமலின் எண்ணம் உண்மையிலேயே அவர் ஒப்பற்றவர் என்ற சிந்தனையை உருவாக்குகிறது.
அத்துடன் இனி தான் நடிக்கும் படங்களின் படபிடிப்பினை அதிகபட்சம் நாற்பது நாளுக்கு மேல் தேவையில்லை என்று சொல்லியிருப்பது அவரின் உலகளாவிய திரைப்பார்வையை பறைசாற்றுகிறது. இதற்கு சான்றாக அவர் வைக்கும் ஆதாரங்களும் வலுவானவையாகவே இருக்கின்றன. அதில் ஒன்று ஹொலிவூட் படமான ஜேம்ஸ் பொண்ட் படத்தின் படபிடிப்பே நாற்பது நாளுக்குள் முடித்துவிடுகிறார்கள் என்பது.
இப்படி எல்லா வகையிலும் மேம்பட்ட சிந்தனையுடனும் செயல்பாடுகளுடன் வளைய வரும் கமல்ஹாசன் சிகரம் தொட்டவர் தான் என்பது உறுதியாகிறது.





