13 வயதுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் அங்குணுவில பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஒரு சிறுமி தனது பாட்டியுடன் தோட்டத்தற்கு சென்றவேளை தோட்டக் காவலாளி குறித்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. சிறுமி துஷ்பரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி 60 வயதுடைய தோட்டக் காவலாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர மஹகும்புக்கடவல பிரதேசத்தில் மற்றுமொறு சிறுமி வீட்டினுள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய் உயிரிழந்துவிட்டதால் குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகின்றார்.
இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுமியின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.