நாடாளுமன்றத்தில் தனக்கு தனியான அலுவலக அறை ஒன்றை ஒதுக்கி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போதே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் தனியான அறைகள் ஒதுக்கப்படும் சம்பிரதாயம் இல்லை என அதிகாரிகள் அவருக்கு தெரியப்படுத்தினர். எனினும் தான் முன்னாள் ஜனாதிபதி என்பதால், தனது நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் அலுவலக அறையொன்று ஒதுக்கப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ச வாதிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகியோருக்கு தவிர எதிர்க்கட்சியின் அங்கம் வகிக்கும் எவருக்கும் நாடாளுமன்றத்தில் அலுவலக அறைகள் ஒதுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் தற்போது சாதாரணமான நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே. நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே மஹிந்த தனியான அலுவலகம் ஒன்றை கோருகிறார் எனவும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.