தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டித் தொடரை இழந்திருந்திருந்த இந்தியாஅணி, ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணியை 2–-0 என வீழ்த்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.
நேற்று இந்தியா கான்பூரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தென்னாபிரிக்க அணித் தலைவர் டிவிலியர்ஸின் அதிரடி சதத்தால் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 303 ஓட்டங்களைக் குவித்தது.
தென்னாபிரிக்க அணியின் கொக்(29), அம்லா (37), டுபெலஸிஸ்(62) என்று தென்னாபிரிக்க வீரர்கள் தங்கள் பங்குக்கு ஓட்டங்களைச் சேர்த்தனர். அணித் தலைவர் டிவிலியர்ஸ் 104 ஓட்டங்களை விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்கா 5 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
304 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா 150 ஓட்டங்கள் அதிரடியாகச் சேர்த்துக்கொடுத்தும் பயனளிக்காமல் போய்விட்டது. இந்தப்போட்டியில் இந்தியா 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. தவான் (23), ரஹானே(60), தோனி (31) என்று ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்று 5 ஓட்டங்களால் இந்தியா தோல்வி யைத் தழுவிக்கொண்டது.
தென்னாபிரிக்கா சார்பாக பந்து வீசிய தாஹிர் மற்றும் ரபடாஆகியோர் தலா 2 விக்கெட் டுக்கள் வீதம் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை டிவிலியர்ஸ் பெற்றுக்கொண்டார்.