சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னதானம் நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
அவ்வாறு ஈடுபட்டால், அவருக்கு வழங்கப்படும் அனுமதியினை ரத்து செய்து, சட்டப்படி நடவடிக்கையை பொலிசார் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய 11-ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 18ம் திகதி கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இதை முன்னிட்டு, வீரப்பன் சமாதி உள்ள மேட்டூரில் அன்னதானம் நிகழ்ச்சி நடத்தவும், அதற்காக வீரப்பனின் உருவபடம் கொண்ட ‘கட்-அவுட்’ வைக்கவும் அனுமதிக்கேட்டு சேலம் மாவட்ட பொலிசில் மனு கொடுத்திருந்தார் அவரது மனைவி முத்துலட்சுமி. ஆனால், அதற்கு அனுமதி வழங்க பொலிசார் மறுத்துவிட்டனர்.
எனவே, என்னுடைய கோரிக்கையை பரிசீலித்து, அனுமதி வழங்க பொலிசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து, ‘மனுதாரர் தன் கணவரின் நினைவு நாளை முன்னிட்டு, அன்னதானம் செய்யவும், அதுதொடர்பான ‘பேனர்களை’ நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மட்டும் வைக்கவும் போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.