காத்தான்குடி கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள கடல் பிரதேசங்களில் நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கரையோரம் பேணல் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேசத்திற்கான அதிகாரி ஜே.மெக்கில் தெரிவித்தார்.
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் கடந்த ஒருமாதமாக இடம் பெற்றுவந்த கடலரிப்பு தற்போது ஓரளவு குறைந்துள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள கடலில் நீராடுவதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாத்துறையினர் கடலரிப்பு ஏற்பட்டுள்ள இந்தப்பிரதேசத்திலுள்ள கடலில் நீராடுவதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தப்பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பினால் இதுவரை சுமார் 30 அடிப்பிரதேசம் கடலுக்குள் சென்று விட்டது. அத்தோடு இங்கு கரையோரம் கட்டப்பட்டிருந்த மீனவர் தங்குமிடக்கட்டடத்தின் மல சல கூட கட்டடத்தின் அத்திவாரக் கட்டடமும் இடிந்து விழுந்துள்ளது.
இந்த கடலரிப்பை தடுப்பதற்கான முதல் நடவடிக்கையாக மண் மூடைகள் கட்டப்பட்டு கடலரிப்பு ஏற்பட்ட இந்த இடங்களில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த கடலரிப்பு நிலைமைகளை அடிக்கடி பார்வையிட்டு எமது திணைக்கள மேலதிகாரிகளுக்கும் காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும் அடிக்கடி அறிக்கையிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.