நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு முடிவு!!

660

1327086994_subhashசுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக அரசிடம் இருக்கும் இரகசிய ஆவணங்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

சுதந்திரப் போராட்டத்தின்போது, இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 18-8-1945 அன்று தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை.

சோவியத் ஒன்றியத்தால் நேதாஜி சிறைபிடிக்கப்பட்டு, சைபீரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், நேதாஜி தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் இரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



அதேசமயம், அந்த ஆவணங்களை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு மறுத்து வந்தது.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.

இதன்போது நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடும் பணி, அடுத்த ஆண்டு அவரது பிறந்தநாளான ஜனவரி 23ம் திகதி தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.