சுவிட்சர்லாந்து நாட்டில் தந்தையின் காரை திருடிக்கொண்டு நண்பர்களுடன் அசுர வேகத்தில் பறந்த சிறுவன் ஒருவன் ட்ரான்ஸ்பார்மர் மீது விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Fribourg மண்டலத்தில் உள்ள Dudingen நகரில் 15 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளான்.
நண்பர்களுடன் உல்லாசமாக காரில் சுற்றி திரிய திட்டமிட்ட அவன், நேற்று மாலை வேளையில் தனது தந்தையின் காரை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு பறந்துள்ளான்.
வழியில் 3 நண்பர்களை ஏற்றிக்கொண்ட அவன், மனம் போன போக்கில் காரை அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றுள்ளான். கார் ஓட்டுவதில் அதிக அனுபவம் இல்லாததால், சில நிமிடங்களில் கார் சிறுவனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வேகம் சென்றுள்ளது.
சிறுவன் வேகத்தை குறைத்து காரை நிறுத்த முயன்றும் கார் நிற்காமல் சாலையின் பக்கவாட்டுப்பகுதியில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியது.
கார் மோதிய வேகத்தில் மிகவும் சேதம் அடைந்ததால், ஓட்டுனரான 15 வயது சிறுவன் உள்பட 3 நண்பர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார், சிறுவர்களை மீட்டு மருத்துவ வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
15 மற்றும் 16 வயதுள்ள சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். பின்னர், சிறுவர்களை கண்டித்து இதுபோன்ற செயல்களில் ஈடுப்படாமல் கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.