வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக 10 அம்சக் கோரிக்கைகளை வடமாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மக்கள் பிரதிநிதிகளிடம் நேற்று வியாழக்கிழமை கையளித்தது.
வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற வடமாகாண மீனவர் பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வின் போதே இது கையளிக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையிலும் வடபகுதி மீனவர்கள் பல பிரச்சனைகளை முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வகையில்இ சட்டவிரோத மீன்பிடி முறை, இந்திய மீனவர்களின் ஊடுருவல், பருவகால மாற்றங்களின் போது தென் பகுதி மீனவர்களின் வருகை, கடற்படை மீனவர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் மற்றும் அச்சுறுத்துதல், மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், மீனவருக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 விடயங்களை உள்ளடக்கிய மகஜரே மக்கள் பிரதிநிதிகளிடம் இதன் போது கையளிக்கப்பட்டது.
இவ்விடயங்களை நாடாளுமன்றத்திலும் வடமாகாண சபையிலும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மகஜர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.