இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக, விஜயவாடா- குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரை ஓரம் சர்வதேச தரத்தில் அமராவதி நகரம் அமைய உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று குண்டூர் மாவட்டம், தூளூர் மண்டலம், உத்தண்டராயுனி பாளையத்தில் நடைபெற்றது. அமரவாதி என்ற பெயரில், 16.9 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் இந்தத் தலைநகரம் உருவாக்கப்படவுள்ளது.
மின்சாரம், நீர் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு இல்லாத, மாசு ஏற்படாத தூய்மையான நகராகவும் இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில், வெளி நாடுகளிலிருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்குவது என்றும் அதுவரை ஐதராபாத்தில் தற்காலிகமாக செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஆந்திராவிற்கான புதிய தலைநகரமாக அமராவதி அமைக்கப்படுகிறது.