மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து ஏமாற்றமளித்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி வருகின்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத் தொடரின் முதல் போட்டி காலியில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியீட்டியது.
இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி நேற்று பி.சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. சோபர்ஸ் -– திஸரா என்று பெயரிடப்பட்ட இக்கிண்ணத்தின் இரண்டாவது போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இப்போட்டிக்கான நாணய சுழற்சிக்கு பயன்படுத்தப்பட்ட நாணயம் விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சோபர்ஸ் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் திஸரா ஆகியோரின் உருவம் பொறித்த நாணயம் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி கருணாரத்ன மற்றும் சில்வா ஆகியோர் களமிறங்கினர். இதில் சில்வா ஓட்டமேதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு மெண்டிஸ் களமிறங்கினார். இவரும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கருணாரத்னவும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது இலங்கை அணி.
அதன்பிறகு சந்திமாலுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸும் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சிறிவர்தன களமிறங்கினார். இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கை சற்று உயர்த்திக்கெண்டு போக 25 ஓட்டங்களுடன் சந்திமால் ஆட்டமிழந்தார். அடுத்து 68 ஓட்டங்கள் பெற்று ஆடிக்கொண்டிருந்த சிறிவர்தன ஆட்டமிழந்தார். ஹேரத் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களைப் பெற்று களத்தில் இருந்தார். இறுதியில் இலங்கை அணி 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பந்துவீச்சில் மிரட்டிய மேற்கிந்தியத் தீவுகளின் வோரிக்கன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் 2ஆம் நாளான இன்று மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களைப்பெற்று மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறி வருகின்றது.