வடக்கு மாகாண இலக்கிய பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றன. இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள் பி.ப 1.30 மணியளவில் தபாலகம் முன்பாக ஆரம்பமாகியது.
தமிழ், சிங்கள, இஸ்லாமிய கலாசார விழுமியங்களை தாங்கி கலாசார நடனங்கள்,கலாசார ஊர்திகள் பவனி கூட்டுறவு மண்டபத்தினை வந்தடைந்தது.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், தமிழ்தாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டமையை அடுத்து தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
இன்றைய நிகழ்வின் தலைமையினை வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இராவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய நிகழ்விற்கு முதலமைச்சர் வரவழைக்கப்பட்ட போதிலும் சுகவீனம் காரணமாக அவர் சமூகம் அளிக்காததை அடுத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவரது செய்தியை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன், கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கை அலங்கரித்தன. இன்றைய நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் விருது, சிறந்த நூலிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.