இறந்தவர்களை நினைவுகூர்ந்து 5 இலட்சம் மரங்களை நடுவதற்கு வடமாகாண சபை ஏற்பாடு!!

495

Tree

எதிர்வரும் கார்த்திகை மாததத்தில் ஐந்து இலட்சம் மரக் கண்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சபை தெரிவித்துள்ளது. இந்த மர நடுகை மாதத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திகை முதலாம் திகதியில் இருந்து 31ஆம் திகதி வரை மரநடுகை தினங்களாக வடமாகாண சபை பிரகடனப்படுத்தியுள்ளது என்றும் இதற்கான மரங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அமைச்சர் ஐங்கரநேசன் கூறியுள்ளார்.

போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவது கார்த்திகை மாதம் என்றும் இறந்தவர்களுக்கு வணக்க அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு எனவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஐங்கரநேசன் இறந்தவர்களை நினைவு கூர்ந்து மரங்களை நடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.



இதேவேளை மர நடுகை மாதத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்ற முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் மரங்கள் நடப்படும் என்றும் வடமாகாண விவசாய அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ஐபிசி தமிழுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற மர நடுகை மாதத்தில் படையினர் இடையூறுகளை விளைவித்திருந்தனர்.புலனாய்வு பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைளும் அதிகரித்திருந்தன. முர நடுகையில் ஈடுபட்ட பலர் படையினரால் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் இந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மர நடுகை மாதத்தில் குழப்பங்கள் ஏற்படாது என வடமாகாண சபை நம்புவதாகவும் கூறப்படுகின்றது.