சித்தப்பாவை காயப்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது!!

1132

தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை ஹற்றன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து, ஹற்றன் நகரிற்குச்
சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் இருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

உடலை முழுமையாக மூடும் வகையிலான ஹபாயா ஒன்றை அணிந்துவந்த நபரே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த காயமடைந்த நபரின் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



இதனையடுத்து விரைவாக செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளதோடு, கொள்ளையிட்ட பணத்தையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த நபர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 31 வயதுடைய யுவதி ஒருவர் என்பதுடன், காயமடைந்த நபரின் மனைவியின் சகோதரியுடைய மகள் எனவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்து கொண்டிருந்த வேளையில் குறித்த யுவதி பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மையை தோற்றுவித்ததோடு, பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் 6 மாதகாலமாக வீட்டுப் பணிப்பெண்ணான சவுதி அரேபியாவில் தொழில்செய்துள்ளதோடு, சுகயீனம் காரணமாக கடந்த வருடம் நாடு திரும்பியவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபராக குறித்த யுவதி, மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தான் அதிகளவான கடன் சுமைக்கு முகங்கொடுத்திருப்பதால் இந்த பணத்தை கொள்ளையிட திட்டமிட்டதாக சந்தேக நபரான ராசையா நிலூஷா பொலிஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும், அடவு வைத்திருக்கும் அதிகளவான நகைகளை மீட்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இந்த பணத்தை வங்கியிருந்து பெற்றதாக காயமடைந்த நபரின் மனைவி கூறியுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவரும் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11 12 13