வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாடில் இன்று(02.11.2015) வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நகர சபையின் கலாச்சார மண்டபத்தில் பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றது .
வவுனியா தினச்சந்தை முன்றலில் ஒன்றுகூடிய வர்த்தக பெருமக்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிஈட்டிய கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், தமிழ்த்தேசியக் கூடமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவாகி பாராளுமன்ற குழுக்களின் தலைவராக விளங்கும் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்திஆனந்தன், சிவமோகன் மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றுக்கு தெரிவாகிய கே.கே.மஸ்தான் வன்னியில் பாராளுமன்றுக்கு தெரிவாகிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்.சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும்
வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் மங்கள வாத்தியங்கள் சகிதம் வவுனியா நகரின் வீதியூடாக அழைத்து வரப்பட்டு தொடர்ந்து வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவிகள் பாண்ட் வாத்தியம் சகிதம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர் .
மங்களவிளக்கேற்றல் நிகழ்வினைத் தொடர்ந்து வவுனியா இறம்பைகுளம் மகளீர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் வவுனியாமுஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்களின் ரபான் நடனம் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மும்மதத் தலைவர்களின் ஆசியினை அடுத்து வவுனியா வர்த்தகசங்க செயலாளர் ஸ்ரீஸ்கந்தராஜா வரவேற்புரையும் தலைவர் டீ.கே.இராஜலிங்கம் தலைமையுரையும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வடமாகாண போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களின் செய்தியை வாசித்தார்.
தொடர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து வர்த்தக சங்க உறுப்பினர் ஆரீப் அவர்கள் வர்த்தக சங்கம் மற்றும் வவுனியா நகரத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பணிகள் தொடர்பாக உரை நிகழ்த்தினார். வன்னியில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தியும் நினைவுக் கேடயங்கள் வழங்கியும் கெளரவிக்கபட்டனர்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களது உரைகள் இடம்பெற்றன. மேற்படி கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், தியாகராஜா, எம்.பி நடராஜ், சிவநேசன், தர்மபால, மாகாணசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், வவுனியா வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
-பிரதேச நிருபர் –






