ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வட்லவானி பாலேம் பகுதியைச் சேர்ந்தவர் வசுந்தரா(32). இவரது கணவர் சத்யநாராயணாவின் கொடுமையை தாங்க முடியாத வசுந்தரா, அவர் மீது நரசப்பூர் மண்டல போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை கைதுசெய்து ராஜமுந்திரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக கணவன் – மனைவி இருவரிடமும் நேரில் விசாரிப்பதற்காக கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது.
இதையடுத்து, கோர்ட்டுக்கு வந்த சத்யநாராயணா, அங்கு காத்திருந்த வசுந்தராவை முரட்டுத்தனமாக கோடரியால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து, மயங்கி விழுந்த வசுந்தராவை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி, ஏலூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காயத்தின் தன்மை மிகவும் மோசமாக இருந்ததால் உயர்சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக இருக்கும் சத்யநாராயணா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.





