வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதையில் 6 ஆசிரியர்கள் பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆறு ஆசிரியர்கள் மது போதையில் பாடசாலை அதிபரின் அலுவலக கண்ணாடிகள், பாடசாலைத் தோட்டம் போன்றவற்றுக்கு பெரும் சேதம் விளைவித்திருந்தனர்.
இதனையடுத்து நெடுங்கேணி பொலிசாரால் குறித்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஆசியர்களை தமது பாடசாலையில் இருந்து உடனடியாக நீக்குமாறும், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் மது போதையில் பாடசாலையில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக சட்ட ரீதியாக பராபட்சம் அற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியர்களின் செயற்பாடு காரணமாக பாடசாலைக்கு மாணவிகளையும், மாணவர்கனைளயும் அனுப்புவதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
மகஜரை பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் உரிய அதிகாரிகளிடம் குறித்த மகஜரை கையளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்தார்.






