ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 09.11.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் படுங்காயங்களுடன் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹற்றனிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் வூட்லேண்ட் பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் சென்ற பயணிகளில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இதில் மேலதிக சிகிச்சைக்காக 5 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







