வவுனியா பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் வெள்ளிக்கிழமை முதல் தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வரத்து அதிகரித்து பாவற்குளத்தின் நீர்மட்டமும் 19 அரை அடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் பாவற்குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம்1, பாவற்குளம் படிவம் 2, மீடியாபாம், ஆண்டியாபுளியங்குளம், மெனிக்பாம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழை தொடரும் பட்சத்தில் வான் கதவுகள் மேலும் திறக்க வேண்டிவரும்.
இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக மன்னகுளத்தில் 7 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், வவுனியா- சிதம்பரபுரம் வீதியில் சமனங்குளம், செட்டிகுளம்- மன்னார் வீதியில் சின்னசிற்பிக்குளம் ஆகிய பகுதிகளில் வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்வதால் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.






