முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 840 குடும்பங்களைச் சேர்ந்த 2000ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன், ஏனைய அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை வரைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவில் எந்தக்குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன், கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான் மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
துணுக்காய் பிரதேசத்திலேயே கூடுதலான குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வெள்ளநீர் தேங்கியிருக்கும் பிரதேசங்களில் நீரை வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரான வடிகாலமைப்பு செய்யப்படாமையே நீர் தேங்கி நிற்பதற்கு காரணமாக இருக்கின்றது.
எதிர்காலங்களில் வடிகாலமைப்பு வசதிகளையும் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.






