புறக்கோட்டை–கதிரேசன் வீதிப் பகுதியில் பட்டப்பகலில் நபரொருவரின் கழுத்தை வெட்டிவிட்டு வங்கியில் வைப்பிலிட எடுத்துச்செல்லப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் அடையாளம் தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.00 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த அப்பிரதேசத்தின் பால் மா களஞ்சியம் ஒன்றின் பராமரிப்பு நிதி சேகரிப்பாளரான லெஸ்லி குணவர்த்தன (வயது 58) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய முடிவதாவது,
புறக்கோட்டை–கதிரேசன் வீதியில் உள்ள பிரபல பால் மா களஞ்சியசாலை ஒன்றில் நிதிசேகரிப்பாளராகக் கடமையாற்றும் நபர் நேற்றும் வழமை போன்று நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நேற்றைய தினம் குறித்த வீதியில் உள்ள பல கடைகளில் நிதியை சேகரித்த அவர் சேகரிக்கப்பட்ட சுமார் 12 இலட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்றுள்ளார்.
இதன் போது அவரை பின்தொடர்ந்து வந்துள்ள கொள்ளையன் ஒருவன் அந் நபரின் கைகளில் இருந்த பணத்தை பறித்துச் செல்ல முற்பட்டுள்ளான். கொள்ளையனிடமிருந்து பணத்தை காக்க குறித்த நபர் போராடவே கொள்ளையன் உடன் வைத்திருந்த கத்தியை எடுத்து குறித்த நபரின் கழுத்தை வெட்டியுள்ளான். பின்னர் பணத்தை எடுத்துக்கொன்டு அவன் தப்பிச் சென்றுள்ளான்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த புறக்கோட்டை பொலிஸார், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சம்பிக்க சிறிவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





