தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பொதுபலசேனா அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலக்கு தற்போது பிரான்சிற்கு அச்சுறுத்தலாகியுள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த அமைப்பின் இலக்கு இலங்கை பக்கம் திரும்பலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் புதிய விசா வழங்கும் திட்டமும் அவர்கள் நாட்டிற்குள் நுழைய சாதகமான காரணியாகவுள்ளன.
தற்போது கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள்இ குருணாகல் பரகாதெனிய பிரதேசம், மாவனெல்லை மாளிகாவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் மதரசா என்ற போர்வையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் மத தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன. இது எமது நாட்டிற்கு எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் ஐ.எஸ். அமைப்பினை விடவும் கொடூரமான அமைப்புக்கள் உருவாகும் சாத்தியம் உள்ளன.
உலகில் இடம்பெறும் கடும் போக்கு வாதிகளின் தாக்குதல்களை நாம் விமர்சிக்கின்றபொழுது எமக்கு பலர் இனவாதியாக முத்திரை குத்துகின்றனர். இது தொடர்பில் சமூக பொறுப்புடன் செயற்படும் முஸ்லிம் தலைவர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர்.
பொதுவாக எல்லா சமூகத்திலும் கடும்போக்குவாதம் பேசப்படுவது இயல்பு. ஆனால் பொறுப்புணர்வு மிக்க மதத்தலைவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதிக்கும் பட்சத்தில் அவர்களின் அமைதி போக்கு எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும்.
இந்நிலையில் தற்காலத்தில் ஐரோப்பியநாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் ஐ.எஸ் இயக்கத்தின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். இவர்கள் தாம் தீவிரவாத அமைப்பில் உள்ளோம் என தமது பெற்றோருக்கும் அறிவிப்பதில்லை. இவர்கள் அல்லாஹ் என்று இறைவனின் பெயரை கூறிவிட்டு எந்த தவறையும் துணிந்து செய்கின்றனர். இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் முஸ்லிம் சமூகத்தில் பொறுப்புணர்வு உள்ளவர்கள் அமைதி களையவேண்டியது அவசியம்.
அதோபோல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் பிரான்சியர் அல்லாத வேறு இனத்தவர்களே வாழ்ந்தனர். அதனால் ஐ.எஸ் இன் தாக்குதலில் அதிகம் அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். எனவே எதிர்காலத்திலும் இவ்வாறன தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் ஐ.எஸ் இயக்கத்திற்கு மட்டுமல்லாது முஸ்லிம் சமூத்திற்கு இவ்வாறான நிலைக்கு முகம்கொடுக்க நேரிடும்.





