திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்த்து அங்கு அமெரிக்க படை முகாம்களை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது நாட் டின் தேசிய பாதுகாப்பிற்கும் தெற்காசி யாவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என முன்னாள் அமைச்சரும் சம சமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரிக்கை விடுத்தார்.
உலக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வ தேச நாடுகள் இலங்கையின் விடயத்தில் தலையிடுவதைப் போன்று அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு பொரளையில் உள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சோஷலிச மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பயங்கரவாதிகள் பிரான்ஸில் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் எமது கவலையையும் அனுதாபத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேவேளை, உலக பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேசம் ஒன்றிணைந்து போராடப்போவதை வரவேற்கின்றோம்.இலங்கையில் இதேபோன்றதொரு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே எமது படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆனால் இன்று உலகப் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடத் தயாராகும் சர்வதேசம் எமது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை தொடர்பில் எமது படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது.எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டது போன்று சர்வதேச ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கும் போது அவற்றில் தலையிட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கை அரசாங்கம் இன்று முழுக்க முழுக்க அமெரிக்காவின் சார்புத்தன்மையானதாக கீழ்படிந்து உள்ளதென அந்நாட்டின் உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா தனது பாதுகாப்பு தொடர்பில் கடல் வலயத்தினூடாக முன்னெடுத்து வரும் பாதுகாப்பிற்காக திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது.
அரசாங்கமும் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்ப்பதற்கு தயாராக உள்ளதோடு திருகோணமலையில் அமெரிக்கப் படையினரின் முகாம்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்க முன்வந்துள்ளது.
இது பயங்கரமான நிலைமையாகும். இவ்வாறான நிலை ஏற்பட்டால் அது சீனாவுக்கும் ஆபத்தானதாக அமையும். அது மட்டுமல்லாது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.கடந்த ஆட்சிக் காலத்தில் இதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை என்றார்.





