சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக(NISD) ‘உளவியல் உளவளத்துணையின்’ டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்கள், இன்று தமது களப் பயிற்சிக்காக தயார்ப்படுத்தப்பட்டு வெளியிறக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு வட பிராந்திய NISD பிரதான பயிற்சி வளாகத்தில்(கிளிநொச்சி) நடைபெற்றது. நிகழ்விற்கு சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ராஐன் அவர்கள் தலைமை தாங்கினார். வந்திருந்த அதிதிகளின் சுருக்கவுரைகள்..
உளமருத்துவர் Dr.அருமைத்துரை அவர்களது கருத்தில்… சமீபகாலத்தில் அனைத்து துறைகளிலும் நடைபெறும் புதிய தேடல்கள் கண்டு பிடிப்புகள் போல் இத்துறையிலும் எம்மவர் பல உத்திகள் நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
உளமருத்துவர் Dr.ஜெயரூபன் அவர்கள் கருத்துரைக்கையில்.. இத்துறை சார் படிப்பை புத்தகத்துடன் வரையறுக்காது இத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்காது.. தொடர்ச்சியான உங்கள் சேவை எம்மால் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
NISD பயிற்சிப் பிரிவு இணைப்பாளர் திரு தர்ஷன் அவர்கள் கூறும் போது.. கல்விப் புலம்மிக்க பல ஆரோக்கியமான சமூகப்பணியாளர்களை உருவாக்க வேண்டும் எனும் எமது நிறுவனத்தின் நோக்கமானது உங்கள் அர்ப்பணிப்பு தன்மையுடன் கூடிய சேவை மனப்பான்மையிலேயே தங்கியுள்ளது என்றார்.
கிளிநொச்சி மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு துஸ்யந்தன் அவர்களது உரையில்.. மீள் குடியேற்ற காலத்தில் உளப்பணியில் மிகவும் சிரமப்பட்டதாகவும்.. ஆனால் தற்போது இருக்கும் வளங்களை வைத்து ஓரளவு செயற்படக்கூடிய நிலை இருப்பதாகவும், அதன் ஒரு வடிவமே உங்களுக்கான இப் பாடநெறி மற்றும் பயிற்சிகள் எனவும் கூறினார்.
யாழ் மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு உதயகுமார் அவர்கள் கூறியதாவது..படித்து விட்டு பலபேர் வெளியேறினாலும் தளத்தில் தொடர்ந்து நிற்போர் குறைவு. உள்ளத்தை வளப்படுத்தும் துணைகளின் உள்ளங்களில் சேவை மனப்பான்மை வளர வேண்டும் என்றார்.
கிளிநொச்சி யுனிசெப் பிரதிநிதி சர்மிலி அவர்கள் கூறும்போது.. எமது எதிர்பார்ப்பு இவ்வாறான வளங்களை இங்கேயே பயன்படுத்துவதாகும். எனவே உங்கள் உளவளப் பணிகளுக்காக எம் ஆதரவு தொடரும் என்றார்.
தொடர்ந்து சிற்றுண்டி பரிமாறலுடன் ஒன்றுகூல் நிறைவு பெற்றது.






