கனடிய நாட்டு பயணிகள் விமானத்தின் என்ஜினை எதிர்பாராதவிதமாக பறவை ஒன்று தாக்கியதை தொடர்ந்து, பற்றி எரியும் நெருப்புடன் விமானத்தை அவசரமாக தரையிறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் அல்பேர்ட்டா நகருக்கு அருகில் CNRL என்ற நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணியில் ஈடுப்பட்டு வந்த சுமார் 130 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு போயிங் 737-300 ரக விமானம் நேற்று மாலை 6 மணியளவில் புறப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டாவில் உள்ள Fort MacKay விமான நிலையத்திற்கு புறப்பட்ட அந்த விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.
விமான ஓடுபாதையில் இருந்த ஊழியர் ஒருவர் விமானத்தின் என்ஜினில் இருந்து கரும்புகையும் நெருப்பும் வெளியாவதை கண்டு உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
விமானத்தின் என்ஜின்களில் ஒன்று பழுதாகியிருப்பதும் அதில் தீப்பற்றி இருப்பதையும் உணர்ந்த விமானிகள், உடனடியாக உயரத்தை குறைத்து விமான நிலையத்தை வட்டமடிக்க தொடங்கினர்.
தரையிறங்க சரியான சந்தர்ப்பம் ஏற்பட்டதும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.எவ்வித ஆபத்தும் இன்றி விமானம் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் விமானிகளை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
விமானத்தின் என்ஜினை சோதனை செய்த அதிகாரிகள், விமானம் மேலே எழும்பியபோது அதனை பறவை தாக்கியதால் இந்த ஆபத்து ஏற்பட்டுருக்கலாம் தீர்மானித்துள்ளனர்.
பயணிகள் அனைவரும் சிறு காயம் இன்றி பத்திரமாக தரையிறங்கியதை தொடர்ந்து, விமானத்தில் ஏற்பட்ட சேதாரத்தை விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.





