
சென்னைப் மாநகர மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இனி நாள்தோறும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னைக்கு குடிநீர் வழங்க பயன்படும் ஏரிகளில் தற்போதைய பெருமழைக்கு முன்னர் போதிய தண்ணீர் இல்லை என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக, 9,053 மில்லியன் கனஅடி நீர், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீர், கடல்நீரை குடிநீராக்கும் இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கிடைக்கும் நீர், புதிய வீராணம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நீர் – ஆகியவற்றின் அடிப்படையில் சென்னையில் இனி நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் மீண்டும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதுதவிர, அம்பத்தூர், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த குடிநீர் பணிகள் முடிவடைந்துவிட்டதால், அங்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.





