சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி அந்த நாட்டு இஸ்லாமிய சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்தே இலங்கையை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இலங்கையை சேர்ந்த நபருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உறவு வைத்துக் கொண்டதாக கூறி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தமது கணவருக்கு துரோகம் செய்ததாக கூறி சாகும் வரை கல்லால் அடித்து தண்டனையை நிறைவேற்ற இஸ்லாமிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் குற்றஞ்சாட்டபட்ட நபர் நீதிமன்றத்தில் 4 முறை குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளரான உபுல் தேசப்பிரியா.
இருப்பினும் மரண தண்டனையில் இருந்து அவரை மீட்கும் பொருட்டு இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் பிஞ்சு குழந்தயை கொலை செய்த வழக்கில், இஸ்லாமிய நீதிமன்றத்தால் தலைதுண்டிக்கப்பட்டார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் இலங்கையில் இருந்து சுமார் 3 லடசம் பேற் மத்திய கிழக்கு நாடுகளில் சென்று பணிபுரிந்து வருகின்றதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கைப் பணிப்பெண் விபச்சார வழக்கில் தொடர்புடைய ஆணுக்கு 100 சவுக்கடி மட்டும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.