வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் நடுவர் மற்றும் இலங்கை வீரர் டில்ஷான் முனவேராவை வசைபாடிய சாகிப்-அல்-ஹசனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணியின் முன்னணி வீரராக இருப்பவர் சாகிப். இவர் வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் ரான்க்பூர் அணியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சில்கெட் அணிக்கு எதிரான போட்டியில் 4வது ஓவரில் டில்ஷான் முனவேராவை சாகிப் ஆட்டமிழக்க செய்தார். அப்போது அவரை நோக்கி வசை பாடினார்.
பின்னர் 13வது ஓவரின் போது முஷ்பிக்குர் ரஹ்மானுக்கு அவுட் கேட்டு நடுவரிடம் முறையிட்டார் சாகிப். அப்போது அவுட் கொடுக்காத நடுவரை நோக்கி வசைபாட தொடங்கினார். பின்னர் இது தொடர்பாக ஆடுகள நடுவர்கள் புகார் அளித்தனர். வீடியோவை ஆராய்ந்து பார்த்தில் சாகிப் வசை பாடியது தெளிவாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு 20,000 டாக்கா அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சாகிப் முன்னணி வீரராக இருந்தாலும் அடிக்கடி இது போன்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த காரணத்திற்காகவே கடந்த ஆண்டு வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு 6 மாதம் தடை விதித்தது. பின்னர் அவர் மன்னிப்பு கோரியதால் 3 மாதமாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





