கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் வான்கட்டிற்கு அருகில் கசிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பொறியியலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், அவரது ஆலோசனையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் குளம் 2010ம் ஆண்டு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டது. சுமார் 29 மில்லியன் செலவில் புனர்நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 2013ம் ஆண்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வான்கட்டின் கீழ் பகுதியில் கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து, விவசாயிகள் பொறியியலாளரின் ஆலோசனைக்கமைய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாரிய நிதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்தக்குளம், 2 ஆண்டுகளில் இவ்வாறு உடைப்பெடுக்கும் அபாய நிலைக்குதள்ளப்பட்டுள்ளமை விவசாயிகள் மத்தியில் விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக தொடர்ந்தும் குறித்த குளம் வான்பாய்ந்து வருகின்றது.
புனரமைப்பு பணிக்காக பல இலட்சம் பணம் செலவளிக்கப்பட்டுள்ள போதிலும்,இவ்வாறு குளம் சேதமடையும் நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இக்குளத்திற்கான நினைவு கல் திரை நீக்கம் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உரிய முறையில் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் குறித்த குளம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.






