மக்களின் நம்பிக்கையை படிப்படியாக தகர்த்துவரும் நல்லாட்சி அரசாங்கம் : புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி!!

667

புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை சனிக்கிழமை மாத்தளையில் நடாத்தியது. செரில்கோ உணவு விடுதியின் கேட்போர் கூடத்தில் 28.11.2015 சனிக்கிழமை அன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்..

கடந்த ஒன்பது வருடங்களாக ராஜபக்ச அரசாங்கம் மிக மோசமான தனிநபர் சர்வதிகாரத்தை பாசிசமாக முன்னெடுத்தது. அந்த ஆட்சிமுறை வீழ்த்தப்படவேண்டும் என்பதில் எமது கட்சியும் ஏனைய ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளோடும், சாதாரண உழைக்கும் மக்கள் பக்கம் நின்றுமே போராடியது.

மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி என்று சொல்லக்கூடிய கூட்டாட்சி அதிகாரத்திற்கு வந்து 11 மாதங்கள் ஆகின்றது. மக்கள் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கை படிப்படியாக வீழ்ந்து கொண்டிருப்பதே யதார்த்தமாகும். நாட்டு மக்கள் எதிர்நோக்கும் இரு முக்கிய பிரச்சினைகளாகிய பொருளாதார நெருக்கடிக்கும், தேசிய இனப்பிரச்சினைக்கும் இன்று வரை மக்கள் சார்பானதான தீர்வு இல்லாதது விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.

நல்லாட்சி என்பது பெயரளவில் இருக்கின்றதே தவிர செயலளவில் பழைய ஆட்சியின் தொடர்ச்சியே ஆகும். ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆரின் வாரிசு என்பதை தன் பொருளாதார திட்டமிடல்களால் நிரூபித்து வருகின்றார்.

எமது நாடு அடிப்படையில் ஓர் விவசாய நாடு 75 வீதமான கிராமிய கட்டமைப்பினை கொண்ட நாடு. நாட்டினுடைய யதார்த்த நிலைமைக்கு ஏற்பவும், புவியியல், அரசியல், சமூக, பண்பாட்டு அம்சங்களுக்கேற்பவுமே திட்டங்களை வகுக்க வேண்டுமே ஒழிய கண்மூடித்தனமாக மற்றைய நாடுகளை பிரதியெடுத்து (கொப்பியடித்து) எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

இன்றும் எமது நாட்டில் 43 வீதமானவர்கள் நாளொன்றுக்கு 2 டொலர்கள் வருமானம் பெறுபவர்களாகவே உள்ளனர். அதாவது நாள் வருமானம் 260 ரூபாவாகும். இது கடந்த 1977 களில் இருந்து பின்பற்றப்படடு வரும் திறந்த பொருளாதார கொலனித்துவ நடைமுறையின் வெற்றியேயாகும்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் வல்லுனர்களின் ஆலோசனையின் வடிவமே தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டமாகும். ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் இணைந்து நடத்தும் கூட்டு நலன்புரி அம்சங்களை குறைத்து, மானியங்களை வெட்டி, வரிகளை மக்கள் மீது திணித்த திட்டமாகவும், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியத்திலும் கை வைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுவதாக தென்படுகின்றது.

மேலும் ஓய்வூதியத்தை நவீனமயப்படுத்துகின்றோம் என்ற பெயரில் குறுக்கு வழிகளை கையாள்வதை நோக்கக்கூடியதாக உள்ளது. நாட்டு மக்கள் மீது புகையை சோதிக்கின்றோம், நெருப்பை சோதிக்கின்றோம் என்று கட்டணங்களை அதிகரித்து வெளிநாட்டவர்கள் காணி வாங்குவதற்கு இருந்த தடைகளை நீக்கிய மாபெரும் புரட்சிகரமான நல்லாட்சி வரவு செலவுத்திட்டமே என்று வர்ணித்த சி.கா.செந்திவேல் மேலும் தெரிவித்ததாவது..
தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பில் தீர்வு கிடைக்கும் என்று தூர வெளிச்சம் காட்டப்படுகின்றது. மாகாண, உள்ளூராட்சி சபைகளிற்கே அதிகாரத்தை பரவலாக்குவதற்கு மறுக்கும் அரசாங்கம் எப்படி ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சிகள் தெரிவு செய்யாது அரசாங்கமே தெரிவுசெய்துள்ளதாகவும் இதன் மூலம் நல்லிணக்கத்தை காட்டப்பார்ப்பதாகவும் தெரிவித்த பொதுச்செயலாளர், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்தும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தலாமே என்றார்.

நல்லாட்சி அரசு பெரும் முதலாளிகளுக்கும், அமெரிக்க, மேற்குலக, இந்திய எசமானர்களை திருப்திபடுத்தும் நிகழ்ச்சி நிரலையே மேற்கொண்டு வருகின்றது.

நல்லாட்சி அரசு மாணவர்களுக்கு தாக்குதல் நடாத்தியதன் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்குவோம் என்பதையும் நாட்டு மக்களுக்கு பறைசாற்றி உள்ளதாகவும் சி.கா.செந்திவேல் தெரிவித்தார்.

DSCF0516 DSCF0529