இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. ஐ.பி.எல். சீசன் தொடங்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கடந்த மூன்று வருடங்களாக அந்த பதவியில் இருந்து வந்த கும்ப்ளே இன்று அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவரது தலைமையில் மும்பை அணி இரண்டு முறை ஐ.பி.எல். கிண்ணத்தையும், ஒரு முறை சாம்பியன் லீக் கிண்ணத்தையும் வென்றுள்ளது.
ஐ.சி.சி.யின் தலைவராக ஷசாங் மனோகர் பதவி ஏற்றதும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியில் இருக்கும் நபர் ஒரு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி ரவி சாஸ்திரி, ரோஜர் பின்னி போன்றவர்கள் தங்களது ஒரு பதவியை இராஜினாமா செய்தனர். அந்த வரிசையில் பி.சி.சி.ஐ.யின் முக்கிய பதவியில் இருக்கும் கும்ப்ளே, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை ஆலோகர் பதவியை இராஜினாமா செய்திருப்பார் எனத் தெரிகிறது. ஆனால், கும்ப்ளே இராஜினாமா செய்ததற்கான முழுவிவரம் இன்றும் தெரியவில்லை.
‘‘மும்பை இந்தியன்சில் பணியாற்றும்போது எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. 3 வருட பயணம் அருமையானது. அவை மறக்கமுடியாத நினைவுகள்’’ என்று கும்ப்ளே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





