உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் : ப.சத்தியலிங்கம்!!

537

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சட்டரீதியான உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது..

வடக்கு மாகாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றமானது சட்டரீதியானதாக இருத்தல் வேண்டும். இதில் இனஇமத ரீதியான பாரபட்சம் இருக்கமுடியாது.

தமது சொந்த இடங்களில் வாழ்ந்தவர்கள் அவர்களது இடங்களில் மீள்குடியேறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவர். எனவே இடம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.

மாறாக வேறு பிரதேசங்களிலிருந்து மக்களை இறக்குமதி செய்து மீள்குடியேற்றம் என்றபோர்வையில் குடியேற்றம் செய்வதை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது என தெரிவித்துள்ளார்.

இதுவரைகாலமும் மத்திய அரசானது வடக்கு மாகாணத்தில் நேரடியாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதுவிடயமாக அண்மையில் ஜனாதிபதி அவர்கள் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சர்களை அழைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது எதிர்வரும் காலங்களில் மாகாண சபையுடன் இணைந்தே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் , மீள்குடியேற்றம் தொடர்பிலான தெளிவான கொள்ளையொன்றை வகுக்கவேண்டிய அவசியம் குறித்தும் ஜனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தியிருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் மாகாண ஆளுனரின் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ஆகியோரின் இணைத்தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.

மாகாண புனர்வாழ்வு அமைச்சர், பிரதம செயலாளர், புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர், மத்திய புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மாகாண மட்டத்தில் இரண்டு மாதங்களுக்கொரு தடவையும், மாவட்ட மட்டத்தில் மாதமொருமுறையும் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டங்களை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டங்களை நடாத்திவருகின்றோம். ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கூட்டம் முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதி கிளிநொச்சியிலும், 7,8 ஆம் திகதிகளில் முறையே முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும், 11ஆம் திகதி வவுனியா மாவட்டத்திலும் மேற்படி கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

இந்தக்கூட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களின் தலைவர்களையும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரையம் அழைத்து கலந்துரையாடவுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1 2 3