சென்னையில் கடத்தப்பட்ட இலங்கை தம்பதியினர்..

818

பணம் கேட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சினிமா பாணியில் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை தம்பதியினரை போலீசார் மீட்டுள்ளனர். இக்கடத்தல் தொடர்பாக பெண் தாதாவாக செயல்பட்ட தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரான 59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா இங்கிலாந்தில் குடிஉரிமை பெற்றவர் வசித்து வரும் இவர்களுக்கு அங்கு பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளன.இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார்.

கடந்த மாதம் 25-ந் தேதி லண்டனில் இருந்து தவராஜா இலங்கைக்கு சென்றார். பின்னர் தமிழகத்தை சுற்றிப் பார்க்க 29-ந் தேதி மனைவியுடன் கணபதி பிள்ளை தவராஜா சென்னை வந்தார். ஆனால் அவர்கள் திட்டமிட்டிருந்தபடி தியாகராயர் நகர் ஹோட்டலுக்கு அவர்கள் செல்லவில்லை. இதனால் அவர்கள் எங்கே போனார்கள் என்ற மர்மம் நீடித்து வந்தது. இந்நிலையில் லண்டனில் உள்ள கணபதி பிள்ளையின் மகள் தர்ஷினிக்கு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அதில் அவரது பெற்றோரை கடத்தி வைத்திருப்பதாகவும் நாங்கள் சொல்லும் இங்கிலாந்து நபரிடம் 3 லட்சம் பவுண்ட்ஸ் அதாவது இலங்கை மதிப்பில் 5.75 கோடி கொடுத்தால் அவர்களை விடுவிப்போம் என்றும் ஒரு பெண் ரௌடி போல மிரட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து லண்டன் காவல் துறையில் தர்ஷினி முறைப்பாடு செய்தார். லண்டன் போலீசார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். திருச்சியில் சிக்கியது கடத்தல் கும்பல் இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணபதிபிள்ளையின் லண்டன் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் ஈழத் தமிழரான அஜந்தன் என்பவர்தான் இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு தமது திருச்சி நண்பர் ரமேஷ் மூலம் அரங்கேற்றியிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ரமேசின் நண்பர் கண்ணன், பெண் தாதா போல் மிரட்டிய ஆசிரியை இந்திரா மேரி, மதியழகன், பிரபு, சரவணன், சதீஷ்குமார், வசந்த், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர்.



அவர்கள் தவராஜாவை ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர். அங்கிருந்தபடியே தொலைபேசியில் தர்ஷினியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தொலைபேசி அழைப்புகளை வைத்து தவராஜாவும், அவர் மனைவியும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த காவல்துறை அவர்களை ஒரு வீட்டில் இருந்து மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய சத்யா என்பவர் தலைமறைவாகி விட்டார்.லண்டனில் உள்ள அஜந்தனும், ரமேசும் கைது செய்யப்பட்டனர்.

லண்டனில் இருந்தபடி அஜந்தன் மின்னஞ்சல் மூலம் தவராஜா, மற்றும் அவர் மனைவி புகைப்படத்தை கண்ணனுக்கு அனுப்பினார். தவராஜா சென்னை வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களையும் தெரிவித்திருந்தார் . இதை வைத்தே கடத்தல் கும்பல் சினிமா பாணியில் இருவரையும் கடத்தியிருக்கிறது.தாங்கள் கடத்தப்பட்டது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து நாங்கள் இறங்கினோம். தி.நகரில் நாங்கள் தங்க ஹோட்டல் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த ஹோட்டல் பெயர் பலகையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். எங்கள் பெயரும் அதில் இருந்தது.

எனவே அவர் ஹோட்டல் ஊழியர்தான் என்று நினைத்து அவருடன் சென்று காரில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும் மேலும் 3 பேர் வந்து நாங்கள் சென்ற காரில் ஏறினார்கள். அதே நேரத்தில் கார் தி.நகருக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் கார் ஓட்டுனரிடம் கேட்டோம். அதற்கு அவர் தி.நகரில் வீதி பணிகள் நடப்பதால் வேறு வழியாக அழைத்து செல்கிறோம் என்றார். சிறிது நேரத்தில் கார் புறநகருக்கு சென்று விட்டது. இதனால் எங்களுக்கு சந்தேகம் அதிகரித்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தபோது எங்களை அடித்து உதைத்தனர்.

எங்களிடம் இருந்த தொலைபேசியும் பறித்துக் கொண்டனர். ஒருநாள் முழுவதும் காரில் வைத்தே எங்களை எங்கெங்கோ அழைத்து சென்றனர். மறுநாள் எங்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அப்போது கத்திமுனையில் நான் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட நகைகளை பறித்து கொண்டனர். இதையெல்லாம் பார்த்தபோது நாங்கள் உயிருடன் திரும்புவோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. நல்ல வேளையாக சென்னை காவல் துறையினர் சிறப்பாக செயற்பட்டு எங்களை மீட்டு விட்டனர். காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் அவர்கள்.