கண்டி – கொழும்பு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவைக்கு பயணிகளிடையே பலத்த வரவேற்பு காணப்படுவதனால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிரூட்டப்பட்ட கடுகதி சொகுசு ரயில் சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
முதலாவது குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை நேற்று கண்டிக்கும் கொழும்புக்குமிடையில் ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
நேற்று அதிகாலை 5.50 மணிக்கு கண்டியில் இருந்து ஆரம்பமான குளிரூட்டப்பட்ட சொகுசு கடுகதி ரயில் காலை 8.30 மணிக்கு கொழும்பை வந்தடைந்தது. கண்டியில் இருந்து புதிய சொகுசு ரயில் சேவையை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அதே ரயில் பயணிகளுடன் பயணம் செய்தார்.
மேற்படி ரயில் சேவை திங்கள்- வெள்ளி- சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாத்திரம் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சரது வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் தினமும் இந்த கடுகதி சொகுசு ரயில் சேவையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு ரயில் பிற்பகல் 5.20 மணிக்கு கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணமாகும். டிக்கட் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படுகிறது.
1864 இல் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது முதல் முழுமையாக குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஈடுபடுத்தப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிரதானமாக இலக்கு வைத்தே குளிரூட்டப்பட்ட ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியது.
அமைச்சர் மேலும் கூறியதாவது- வீதிகளில் காணப்படும் அதிக வாகன நெரிசல் காரணமாக மக்கள் ரயிலில் பயணிக்க அதிகம் விருப்பம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதை இலக்காக வைத்தே குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றார்.
மக்களின் வசதிக்காக நாடுபுராவும் குளிரூட்டப்பட்ட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ரயில் சேவையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருவதோடு பயணிகளின் தொகையும் கூடியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்விற்கமைய ரயில் மற்றும் இ.போ.ச. கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய எதுவித தேவையும் கிடையாது என்று கூறிய அவர்- மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறினார்.
h