ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயர் காரணமாக விமான பயணத்துக்கு அனுமதி மறுப்பு: பெண்ணுக்கு நேர்ந்த இன்னல்!!

474

isis_name_004

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு பெயர் காரணமாக விமான பயணத்துக்கான அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கெண்ட் பகுதியை சேர்ந்தவர் ரனி ஐஎஸ்ஐஸ் லேக்(Rani ISIS Lake). இவர் பணி நிமித்தமாக அடுத்த ஆண்டு கனடா செல்லவுள்ளார்.

இந்நிலையில் தனது கிறிஸ்துமஸ் தினத்தை வான்குவர்(Vancouver) நகரில் கொண்டாட முடிவு செய்தார்.இதனையடுத்து ரொறென்ரொவில் இருந்து வான்குவர் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக எக்ஸ்பிடியா என்ற ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளார்.

அவர்களிடம் தன் விபரங்களை தெரிவித்து வந்த லேக் தனது முழு பெயர் ரனி ஐஎஸ்ஐஎஸ் லேக் என்பதையும் தெரிவித்துள்ளார்.அதுவரை டிக்கெட்டை முன்பதிவு செய்துவந்த எஜென்சி திடீரென, தொழிற்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் வேறு ஒரு ஏஜென்சி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.ஆனால் முன்பதிவு செய்த சிலமணி நேரங்களில், உங்களின் விருப்பப்படி உங்கள் டிக்கெட் ரத்து செய்யப்படுகிறது என்று அவருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஏஜென்சியை தொடர்பு கொண்டு நான் டிக்கெட்டை ரத்து செய்யும்படி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.எனினும் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கூறி ஏஜென்சி ஊழியர்கள் இணைப்பை துண்டித்துவிட்டனர்.

மூன்றாவதாக வேறு ஒரு ஏஜென்சி மூலம் முன்பதிவு செய்தபோதும் அவருக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து தனது தாயாரை தொடர்பு கொண்டு தனக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய கூறியுள்ளார். அவரது தாயாரும் லேக்கின் முழு பெயரை குறிப்பிடாமல் முதல் பெயரான ரனி என்பதை மட்டும் தெரிவித்து டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றுள்ளார்.இந்த முறை அவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து லேக் கூறியதாவது, இது மிகவும் பொறுப்பற்ற மற்றும் முறையற்ற செயலாக இருக்கிறது.

இது கண்டிப்பாக பாகுபாடு நிறைந்த ஒரு செயலாக இருக்காது என்று நான் நம்புகிறேன். அனால் இந்த செயல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.நான் கனடாவை சென்றடைந்ததும் எனது கடவுச்சீட்டில் உள்ள பெயரை அந்நாட்டு அதிகாரிகள் பார்த்த பின்பு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.