சான்ட்விச்சுக்கான சண்டையால் தரையிறக்கப்பட்ட விமானம்!!

220

BANNER_DREAMS-TAKE-FLIGHT

விமானமொன்றில் ‘சான்ட்விச்’ உணவிற்காக நெடுநேரம் காத்திருக்க நேர்ந்ததால் கோவமடைந்த பயணி ஒருவர், விமானப் பணிப்பெண் ஒருவரை தாக்கியதையடுத்து அந்த விமானம் அவசரகால நிலைமைகளின் கீழ் தரையிறக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஜெனிவாவிலிருந்து கொசோவோவிலுள்ள பிறிஸ்ரினா நகருக்கு பயணித்த ஈஸிஜெட் விமானமே இவ்வாறு இத்தாலிய ரோம் நகரிலுள்ள விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது. “ நான் இங்கு பல மணி நேரமாக காத்திருக்கிறேன்.

எனக்கு மிகவும் பசியாகவுள்ளது” என கூச்சலிட்டவாறே குறிப்பிட்ட பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியுள்ளார். இதன் போது விமானப் பணிப் பெண் தரையில் விழுந்துள்ளார். எனினும் கோபம் தணியாத அந்தப் பயணி விமானப் பணிப்பெண்ணை தொடர்ந்து அடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சக பயணிகள் அவரை தடுத்து நிறுத்துவதற்கு கடும் முயற்சியை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் அந்தப் பணிப்பெண்ணிற்கு காயங்கள் ஏற்பட்டதுடன் அவரது மூக்குக் கண்ணாடியும் உடைந்துள்ளது. தொடர்ந்து விமானம் அவசரகால நிலைமையின் கீழ் இறக்கப்பட்டதையடுத்து, பணிப்பெண்ணை தாக்கிய பயணி இத்தாலிய போலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்த விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் மற்றொரு விமானத்தில் பிறிஸ்ரினா நகருக்கு பயணத்தை மேற்கொண்டனர்.